கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை பகுதியில் வசித்து வரும் குமார் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவருக்கு அதிக முதலீடு செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என தனியார் கம்பெனி முதலீடு விவரங்கள் அடங்கிய குறுஞ்செய்தி ஒன்று செல்போனில் வந்தது. இதனைப்பார்த்த குமார் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி அந்த இணையதள பக்கத்தில் கேட்ட விபரங்களை கொடுத்துள்ளார்.
பிறகு குமார் அந்த இணையத்தில் சிறிய தொகையை முதலீடாக கொடுத்தார். அப்போது அவருக்கு அதிக லாபம் கிடைத்துள்ளது. மேலும் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அதிக அளவில் முதலீடு செய்தால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். அதை கேட்ட குமார் அவரிடம் இருந்த 2 லட்சத்தி 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் பணம் அனுப்பிய ஓரிரு நாட்களில் எந்த லாபமும் வராததால் பணம் கொடுத்த நபர்களை செல்போனில் அழைத்தபோது அவரால் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. மேலும் அந்த இணையதள பக்கமும் முடங்கியது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமார் உடனடியாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.