திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அபிராமி என்பவர் தனது உறவினர்களுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து அவர் மீண்டும் திருத்தணியில் இருந்து அவரது உறவினர் வீடு இருக்கும் பகுதியான ஆவடி செல்வதற்கு மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அரக்கோணத்தில் சிக்னலுக்காக ரயில் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் திடீரென அபிராமி கழுத்தில் இருந்த தாலிச்செயினை பறித்து கொண்டு தப்பியோடியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அரக்கோணம் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி கர்ணன் தலைமையில் தனிப்படை அமைத்த போலீசார் விசாரணை செய்து வந்தனர். அப்போது அரக்கோணம் ரயில் நிலையத்தில் சந்தேகம் படும் படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து அந்த விசாரணையில் அவர் அபிராமி நகையை பறித்தது தெரியவந்தது.
மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது. நாகராஜ் இதுபோல் ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் நகைகளை பறிப்பது வழக்கமாக வைத்திருந்ததையும் கண்டறிந்த போலீசார் அவரிடம் இருந்த 11 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர்.