மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் அருகே உள்ள வழுதலைக்குடி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 வாரமாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் குடிநீர் வரும் நேரத்திலும் அந்த நீர் சுகாதாரமற்ற குடிநீராகவும், நிறம் மாறியும் காணப்படுகிறது.
இதனால் அந்த நீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரி செய்யும் படி அவர்கள் பலமுறை ஊராட்சியிடம் கோரிக்கை விடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் காலி குடங்களுடன் வழுதலைக்குடி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் மற்றும் கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடம் சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதற்கு பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து களைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.