திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை அடுத்துள்ள கக்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரன்(41), மதியழகன்(39), மதி ராஜா(40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று கக்கன் நகர் அருகே உள்ள ஓடைக்கரை சுடலில் மாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றுள்ளது. அப்போது மகேஸ்வரன், மதியழகன், மதி ராஜா ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
இந்த கோவில் கொடை விழாவில் கக்கன் நகரை சேர்த்த முருகேஸ்வரி மற்றும் அவரது மகன்களான வருண்குமார்(27), ராஜ்குமார்(28), விபின்(27) ஆகியோரும் பங்கேற்றனர். இதனையடுத்து நள்ளிரவில் மகேஸ்வரன், மதியழகன், மதி ராஜா ஆகியோருக்கும் முருகேஸ்வரியின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மது போதையில் இருந்த முருகேஸ்வரியின் மகன் மூன்று பேரும் அவர்கள் கோவிலில் ஆடு வெட்டுவதற்காக கொண்டுவந்த கத்தியால் மதியழகன் மற்றும் மதி ராஜாவை கொலை செய்தனர்.
மேலும் மகேஸ்வரனும் படுகாயமடைந்த நிலையில் தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . இதுகுறித்து தகவலறிந்த திசையன்விளை போலீசார் மற்றும் துணை சூப்பிரண்டு அதிகாரி சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மதியழகன் மற்றும் மதி ராஜாவின் உடலை உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து வருண்குமார் ராஜ்குமார் விபின் ஆகிய 3 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 5 பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.