கடலூர் மாவட்டம் புவனகிரி கோட்டை பகுதியில் விஸ்வநாதன்(25) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பருடன் மதுரையில் இருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த ரயிலில் திண்டுக்கல்லில் இருந்து மதுரை ஊமச்சிகுளத்தை சேர்ந்த வேலு(35) என்பவரும் ஏறி விஸ்வநாதனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து ரயில் இரவு 8.20க்கு கல்பட்டிசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது வேலு வாசலில் நின்று எச்சில் துப்பியுள்ளார். அது விஸ்வநாதன் மீது பட்டதால் அவர் வேலுவை கண்டித்தார். இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த வேலு விஸ்வநாதனை ரயிலில் இருந்து தள்ளிவிட்டார். இதில் கீழே விழுந்த விஸ்வநாதன் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து ரயிலில் இருந்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் பயந்த வேலுவும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். இந்நிலையில் திருச்சி ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விஸ்வநாதனை திருச்சி அரசு மருத்துவமனைக்கும், வேலுவை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது விஸ்வநாதனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சி ரயில்வே போலீசார் வேலு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.