கோவை மாவட்டம் காட்டூர் ராம் நகர் பகுதியில் பாதம், முந்திரி போன்ற பொருட்களை விற்பனை செய்து வரும் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று ராஜன் வீட்டை பூட்டி விட்டு கதிர்நாயக்கன்பாளையம் வரை சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து ராஜன் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் ஒரு நபர் தரையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜன் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, பெருமாள் சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த மர்மநபரை எழுப்பி விசாரணை மேற்கொண்டதில் அவர் பழைய பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பது தெரியவந்தது.
மேலும் ராஜன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட அவர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து திருடன் முயன்றுள்ளார். அப்போது பாலசுப்ரமணியன் மது போதையில் இருந்ததால் வீட்டிற்குள் தவறி விழுந்து அங்கேயே தூங்கியதாக தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.