நீலகிரி மாவட்டம் பென்காம் எஸ்ட்டேட் பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது வனவிலங்குகள் தப்பித்து அப்பகுதியில் இருக்கும் குடியிருப்புகளில் புதுந்து அட்டகாசம் செய்வது வழக்கமாகி வருகிறது. தற்போது அந்த பகுதியில் 3க்கும் மேற்பட்ட கரடிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. அந்த கரடிகள் இரவும், பகலும் என தொடர்ந்து சுற்றி திரிகிறது.
மேலும் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து சாப்பாட்டை சாப்பிடுவதாகவும், கடைகளை உடைத்து, உணவு பொருட்களை தின்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து எஸ்ட்டேட் பகுதியில் வேலை பார்க்கும் தொழிலாளிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
எனவே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் கரடிகளை உடனடியாக பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர் எஸ்ட்டேட் பகுதியில் கூண்டுகள் வைத்து கரடிகளை கண்காணித்து வருகின்றனர்.