கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் கதர்மங்கலம் பகுதியில் செல்வகுமார்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோவை சூலூரை சேர்ந்த கிரித்திகா என்ற பெண்ணை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிருத்திகா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்த செல்வகுமார் கொடுத்த நகை, பணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து செல்வகுமாருக்கு தெரிய வரவே, அவர் கிருத்திகாவின் வீட்டிற்கு சென்று தன்னுடன் மீண்டும் வாழ வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கிருத்திகா வீட்டிற்கு வர மறுத்ததுடன், செல்வகுமாரின் நகை மற்றும் பணத்தையும் திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளார். மேலும் பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் கிருத்திகா ஜீவனாம்சம் கேட்டு செல்வகுமார் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் செல்வக்குமாருக்கு பலத்திடுகிடும் தகவல் கிடைத்தது. கிருத்திகாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து முதல் கணவனை விவாகரத்து செய்யாமல் செல்வகுமாரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த செல்வக்குமார் அவரக்குறிச்சி நீதிமன்றத்தில் கிருத்திகா என்னை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டு எனது நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டதாக வழக்கு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்த நிலையில், செல்வகுமாரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட கிருத்திகா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சின்னதாராபுரம் போலீசார் கிருத்திகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.