தமிழகத்தில் நாய் கடி தொல்லை அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் ரேபிஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நாய் கடியினால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 18 பேர் ரேபிஸ் நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை சுமார் 2,42,782 பேர் நாய் கடியினால் சிகிச்சை பெற்றுள்ளனர். அதில் 22 பேர் பேபிஸ் நோய் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த ஆண்டு நாய்கடி பாதிப்புகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் விலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் நாய் கடிக்கும், பாம்பு கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் 20 ஏ.ஆர்.பி மருந்துகளை கையிருப்பில் வைத்து இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.