ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள புன்னை ஆதிதிராவிடர் காலணியில் பரமசிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், தினேஷ், ரஞ்சித் என்ற இரண்டு மகன்களும், சுப்ரியா என்ற மகளும் உள்ளார். சம்பவத்தன்று பள்ளி விடுமுறை என்பதால் பரமசிவத்தின் மூன்று குழந்தைகளும் வீட்டிற்கு அருகில் உள்ள குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது தினேஷ் மற்றும் சுப்ரியா திடீரெனக் குட்டை நீரில் மூழ்கினர்.
இதை பார்த்த ரஞ்சித் உடனடியாக வீட்டிற்கு சென்று பரமசிவனிடம் நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் குட்டைக்கு வருவதற்குள் அண்ணன் தங்கை இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குட்டையில் உயிரிழந்து கிடந்த தினேஷ் மற்றும் சுப்ரியாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.