திருச்சி அரியமங்கலம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் திருநங்கை ஒருவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலராக பணிபுரியும் சென்னை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் அந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் சிறை சூப்பிரண்டு அதிகாரி ஆண்டாள், டி.ஐ.ஜி ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அந்த திருநங்கையை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப் பணிகள் ஆணையத்தில் பாலியல் தொல்லை குறித்து அவர் மாரீஸ்வரன் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கறிஞர் சுப்புராமன் தலைமையில் விசாரணை குழு அமைத்து திருச்சி மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது மாரீஸ்வரன் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஸ்வரி தயாளன் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மாரீஸ்வரன், அதனை கண்டு கொள்ளாமல் இருந்த சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி, திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு அதிகாரி ஆண்டாள் ஆகியோரை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி துறை ரீதியாக அவர் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்த விசாரணை முடிந்த நிலையில் தற்போது டி.ஐ.ஜி ஜெயபாரதி வேலூர் சிறை காவலர் பயிற்சி பள்ளியில் டி.ஐ.ஜி.யாகவும், அதே பள்ளியில் சூப்பிரண்டு அதிகாரியாக ஆண்டாளையும் நியமித்துள்ளார்.