வாணியம்பாடியில் கள்ளச்சாராயம் விற்று வந்த இரண்டு பேர் மனம் திருந்தி இனி கள்ளச்சாராயம் விற்க மாட்டோம், தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுங்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொது மக்களிடம் இருந்து மனு பெறப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை, பெருமாள் ஆகிய இரண்டு பேர் தாங்கள் பல வருடங்களாக கள்ளச்சாராயம் விற்று வந்ததாகவும், இனி விற்க விரும்பவில்லை என்றும், தாங்கள் ஏழ்மையில் வாடுவதாகவும் தங்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இப்படி இரண்டு நபர்கள் தாமாக முன்வந்து சாராயம் விற்க மாட்டோம் என மனு அளித்த சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார். மேலும் அரசிடமிருந்து அவர்களுக்கு வேண்டியதை பெற்று தருகிறேன் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.